அடுத்தடுத்து கழலும் முக்கிய ‘விக்கெட்’கள்... புதுச்சேரியில் சுருங்கிப் போகிறதா அதிமுக?

அடுத்தடுத்து கழலும் முக்கிய ‘விக்கெட்’கள்... புதுச்சேரியில் சுருங்கிப் போகிறதா அதிமுக?
Updated on
2 min read

தமிழகத்துக்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த பெருமை அதிமுகவுக்கு உண்டு. திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகி 1972-ல் அதிமுகவை உருவாக்கினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் முன்பாகவே கடந்த 1974 -ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வென்று அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி முதல்வரானார். பெரும்பான்மை இல்லாததால், அந்த ஆட்சி 21 நாளில் கவிழ்ந்தது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது.

அதையடுத்து 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று, ஓராண்டு காலத்துக்கு முதல்வ ராக ராமசாமி பதவியில் இருந்தார். அதன்பின்பு புதுச்சேரியில் முக்கிய கட்சியாக அதிமுக வலம் வந்தது. கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த புதுச்சேரி அதிமுக, 10 இடங்களில் போட்டியிட்டு 5-ல் வென்றது.

அப்போது அந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்குத் தேவையான 15 இடங்கள் கிடைத்து விட்டதால் ரங்கசாமி தந்திரமாக அதிமுக-வை கழற்றி விட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா, ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். இதனால் அடுத்த தேர்தலில் தனித்தே 30 தொகுதிகளில் களம்கண்ட அதிமுக, 4 இடங்களைப் பிடித்தது.

கடந்த 2021-ல் ரங்கசாமியையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. இந்தத் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என தமிழகத்தை போலவே முடிவெடுத்த புதுச்சேரி அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. இப்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பியிருக்கிறது.

இந்தச் சூழலில் அதிமுக தனது சுய பலத்தை இழக்கத் தொடங்கியது. காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான அசனா, மாநில செயலாளர் அன்பழகன் தம்பியான முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் என பலரும் கட்சியிலிருந்து விலகி தவெக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டனர்.

கட்சியின் புதுச்சேரி மாநில துணை செயலாளராக இருந்த முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த வையாபுரி மணிகண்டன் நேற்று முன்தினம் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்திருக்கிறார். இப்படியாக முக்கிய நபர்கள் வெளியேற புதுச்சேரியில் அதிமுக சுருங்கி போகிறது.

இம்முறை என்டிஏ கூட்டணியில் 7 தொகுதிகள் வரை கேட்கப்போவதாக அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்து வந்த நிலையில், பாஜக இரு தொகுதிகளை மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கியிருக்கிறது. இது அக்கட்சித் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தொண்டர்கள் கூறுகையில், “புதுச்சேரியில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. என்.ஆர்.காங்கிரஸ் முதல்முறை ஆட்சியை பிடிக்கவும் உறுதுணையாக இருந்தது அதிமுகதான். என்டிஏ கூட்டணியில், புதிதாக வந்த ஒரு கட்சிக்கு இரு தொகுதிகள் தந்துள்ளனர். அதே போல் பாரம்பரியமான எங்கள் கட்சிக்கும் அதையே தந்துள்ளனர்.

இது எந்த வகையில் நியாயம்? புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்த்து இருந்தனர். பலரும் கட்சி பணி செய்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலருக்கு தொகுதிகளில் சீட் கிடைக்கவில்லை” என்று தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், தங்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் வரிசையாக விலகி, கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் அவர்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.

“கட்சிக்குள் நிலவும் கோஷ்டிபூசலும் இதற்கு காரணம். ஆளாளுக்கு ஒரு திசையில் நிற்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது உப்பளம், உருளையன்பேட்டை என இரு தொகுதிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது அதிர்ச்சி தருகிறது” என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

அடுத்தடுத்து கழலும் முக்கிய ‘விக்கெட்’கள்... புதுச்சேரியில் சுருங்கிப் போகிறதா அதிமுக?
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in