

சென்னை: சிறுபான்மை சமுதாய மக்கள் வருகின்ற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக சார்பில் சென்னையில். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய பரிசுப்பை வழங்கினார்.
தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற பின்னர் உரையாற்றிய அவர், “இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களாலும் கிறிஸ்துமஸ் தினமாக மகிழ்வுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், கிறிஸ்துவ மக்களை மிகவும் நேசித்தவர். தனது திரைப்படங்களில் இயேசுபிரானின் கருத்துக்களை, பாடல்கள் வாயிலாக சொல்லி மக்களை நேர்வழிப்படுத்தியவர்.
அதேபோல் ஜெயலலிதா, தான் பெற்ற கல்வியும், ஞானமும் கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் மூலமாக பெற்றதாக பெருமிதத்தோடு பல மேடைகளில் கூறியுள்ளார். அவர் கிறிஸ்துவ பெருமக்களை நேசித்ததோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அனைவரோடும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார். சிறுபான்மை மக்களுக்கு அரசின் மூலம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்படி செய்தார். நாங்களும் அதை தொடர்ந்து செய்து வந்தோம்.
இயேசுபிரான் அவர்கள் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாக வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை, ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும், மக்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் நமக்கு அறிவுறுத்தினார்.
இந்த கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
ஒரு ஊரில், ஒரு விவசாயி, தனது விளை நிலத்தின் அருகில் ஓர் ஆட்டுப்பண்ணை வைத்து, நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பர்களையும், காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பால் ஆடுகள் நன்கு வளர்ந்தன.
இதை பார்த்த சில ஓநாய்கள், எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று, நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால் காவலாளிகளின் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்களால் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இரையாக்க திட்டமிட்டன.
ஒருநாள் இரவில், ஓநாய்கள் ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக் கொண்டு, கள்ளவாசல் வழியாக உள்ளே வந்து, தாங்களும் ஆடுகள்தான் என்பதைப் போல நடித்து, அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து, தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரை ஆக்கிவிட்டன.
அந்த அப்பாவி ஆடுகள், தாங்கள் ஓநாய்க்கு இரையாகும் போதுதான், அந்த ஓநாய்களின் சுய ரூபத்தை அறிந்து, ‘ஐயோ மோசம் போய்விட்டோமே’ என வருந்தின.இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய உண்மை என்னவென்றால், ‘காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை’.
இன்றைய அரசியலில், பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த 55 மாத காலத்தில், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசின் மூலம் வழக்கமாக கிடைத்து வந்த பல நலத் திட்டங்கள் இப்போது கிடைப்பதில்லை.
உதாரணமாக, அனைத்திந்திய அண்ணா திமுக அரசில் கிறிஸ்துவ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனங்கள் ஒப்புதல்கள் தடையின்றி நடைபெற்றது. தற்போது அந்த முன்மொழிவுகள் திமுக அரசில் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடப்படுகிறது.
கழக ஆட்சியில் ஆலயக் கட்டுமானங்கள் தடையின்றி நடக்க அனைத்திந்திய அண்ணா திமுக அரசின் உதவி முழுமையாக கிடைத்தது. தற்போது அந்த நிலை இல்லை.
சிறுபான்மையினருக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை சிறுபான்மையினரின் அனுபவத்தில் தொடர்ந்து இருக்குமாறு அனைத்திந்திய அண்ணா திமுக அரசில் ஒத்துழைப்பு இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. அனைத்திந்திய அண்ணா திமுக அரசில் சிறுபான்மை மாணவர்களின் படிப்பிற்கான உதவித்தொகை மத்திய அரசிடம் பெறப்பட்டு முழுமையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த நிலை இல்லை.
இப்படி அனைத்திந்திய அண்ணா திமுக அரசில் ‘கிடைத்த’ நன்மைகள், இன்றைய திமுக அரசில் ‘கிடைப்பதில்லை’ என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அஇஅதிமுக என்கிற இந்த மாபெரும் இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக, மக்களின் நலனுக்காக பாடுபடுகின்ற இயக்கம்.
திமுக ஆட்சி என்பது, விளம்பர மாடல் ஆட்சி, விடியல் இல்லா வெற்று ஆட்சி, மக்களுக்கு எதிரான ஆட்சி, மக்களை ஏமாற்றும் ஆட்சி, கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பது மட்டுமே திமுகவினரின் ‘தாரக மந்திரம்’. மக்கள் பயன் பெறுகின்ற வகையில் நல்லாட்சியை அதிமுக அரசு வழங்கியது.
இந்திய துணை கண்டத்திலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திய அரசு அதிமுக அரசுதான் என்பதை இங்கே உறுதியாக சொல்ல முடியும்.
தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்காக கபட நாடகம் ஆடுகின்றனர். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என பேசுவார்கள். மற்றொரு மேடையில் எனது மனைவி கிறிஸ்தவர், எனவே நானும் கிறிஸ்தவர் தான் என பொய் பேசுவார்கள்.
இன்னொரு மேடையில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல எனக் கூறி நடிப்பார்கள். இந்த கபட வேடதாரிகள் யார் என்பதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் நலனுக்காக, அனைத்திந்திய அண்ணா திமுக மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழக முன்னேற்றத்திற்காக கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
சிறுபான்மை மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த மாபெரும் இயக்கம் இன்று வரை ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக நல்லிணக்க இயக்கம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து, அதை கடைப்பிடிக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சகோதர உணர்வையும், அன்பையும், சமத்துவ சிந்தனைகளையும் தனது ஆன்மாவாகவும், இதயமாகவும் கொண்ட இயக்கமாகும்.
அதிலும் குறிப்பாக, சிறுபான்மை மக்களின் உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டபடி காக்கப்பட வேண்டும் என்பதில் என்றும் உறுதியாக இருக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
சிறுபான்மை மக்கள், சிறுபான்மை சமூகங்கள் எந்த வகையிலும் ஒரு அச்சுறுத்தலுக்கோ, பலவீனத்திற்கோ உட்பட்டுவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்கள். இருபெரும் தலைவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறோம்.
எத்தனை நெருக்கடிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கள் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்பதில் யாருக்கும் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தின்போது தமிழ் நாட்டில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருந்ததில்லை.
அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தவரை சட்டம், ஒழுங்கு திறம்பட பாதுகாக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் சாதி, இன, மத மோதல்கள் நடைபெற்றதில்லை. அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒரு ஒப்பந்தம் மட்டுமே. கொள்கை என்பது எங்கள் கட்சியின் உயிர்மூச்சு போன்றது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைப்பார்கள். அந்த அடிப்படையில்தான் அதிமுகவும் கூட்டணி வைத்திருக்கிறது.
1991 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆக, கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அது, அதிமுகவிடம் இருக்கிறது என்பதை சிறுபான்மை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் சிந்தனைக்காக ஒரு சிலவற்றை கூட்டத்தின் வாயிலாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக ஆட்சியில் குறிப்பாக நான் முதல்வராக இருந்த காலத்தில் சிறுபான்மையினர் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது.
சட்டம் ஒழுங்கு சரியாக பேணப்பட்டு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அவர்களின் மேம்பாட்டிற்கான வழிவகை செய்யப்பட்டது. இப்போது பொய்யான தகவல்களை சொல்லி சிறுபான்மை மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு என்று எந்த ஒரு நன்மையும் செய்யாமல் வாய் சவடால் பேசி வாக்குகளை மட்டும் பெறக்கூடிய தந்திரவாதிகள் திமுகவினர். எனவே தான் எம்ஜிஆர் திமுக ஒரு தீய சக்தி, மக்கள் விரோத ஏமாற்று பேர்வழிகள் என அடையாளப்படுத்தினார். ஜெயலலிதாவும் தன் வாழ்நாள் முழுவதும் இந்த தீய சக்திகளை எதிர்த்து போரிட்டார்.
நான் தூத்துக்குடியில் எழுச்சிப்பயணம் சென்றபோது பலதரப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினேன். அப்போது சில பேராயர்கள் என்னை சந்தித்தார்கள். ‘நாங்கள் பள்ளி, கல்லூரி நடத்துகிறோம், மாணவர்கள் போதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கண்டிக்க எங்களால் முடியவில்லை. அதனால் நாங்களாக உங்களைத் தேடி வந்திருக்கிறோம். ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே போதையில் இருந்து மாணவர்களை மீட்க முடியும் என்றார்கள்.
எனவே மக்கள் குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்கள் வருகின்ற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் நடக்கின்ற சீர்கேடுகளை களைய அதிமுகவோடு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கத்தை பேணுகின்ற தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுகின்ற அனைத்திந்திய அண்ணா திமுக கூட்டணியை ஆதரிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். இன்றைய நாள் மகிழ்ச்சியான ஒரு நாள். இன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம்.
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி மேலும் அறிய இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது. இநந்நாளில் கிறிஸ்துவ பெருமக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவில் பங்கு பெறுவதிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடத்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்