“ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் நாடே சிரிக்கிறது” - மாணிக்கம் தாகூர்

“ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் நாடே சிரிக்கிறது” - மாணிக்கம் தாகூர்
Updated on
1 min read

சென்னை: “அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திருடியது குறித்து நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகேதாட்டு அணை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையானது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ‘மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்’ என எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முழங்கியதை அவர் மறந்துவிட்டார்.

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்தது.

இரு மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பிரதமர் மோடி, தன் கடமையைச் செய்யாமல் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார். ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் மத்தியில் ஆட்சியில் இல்லை. அதிகாரம் கொண்ட மத்திய அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் ஆதாரமற்ற குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் திருடியது குறித்து நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது போல்’ உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

“ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் நாடே சிரிக்கிறது” - மாணிக்கம் தாகூர்
“முதல்வர் விஜய் கரூர் செல்வதால் திமுகவுக்கு என்ன பயம்?” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in