

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், முதலில் மாநிலங்களுக்குள் ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்.பி, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான நவாஸ்கனி, 2026 - 27ம் ஆண்டுக்கான விவசாயம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு துணை மானிய கோரிக்கையின் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், ‘‘நாட்டில் 46% விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் 18% மட்டுமே விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது. இந்த புள்ளிவிவரம் இந்த நாட்டின் விவசாயிகளின் நிலையை, அவர்களின் பொருளாதார சூழலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குறைந்தபட்ச ஆதார விலை இல்லை. ஒரு குண்டு ஊசி தயாரிப்பவர் கூட அவருடைய தயாரிப்புக்கான விலையை அவரால் நிர்ணயிக்க முடிகிறது. ஆனால், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியாத வேதனைக்குரிய நிலையே உள்ளது.
என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.39 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நெல்லை சேமிக்க மத்திய அரசு சார்பில், நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நவீன ரக அரசி ஆலை நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிகமாக தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாழ்கின்றனர். தென்னை விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயன்பெறவும், விவசாயிகள் வருவாய் ஈட்டவும் வழிவகை செய்ய வேண்டும். இதற்காக, தென்னை பொருள்களை அதிகளவில் உற்பத்தி செய்து அதனை பாதுகாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைத்து தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான பனை விவசாயிகள் உள்ளனர். பனை மரங்களை பாதுகாப்பது என்பது மண்வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாப்பதற்கு அவசியம் என்பதை இன்று நாம் உணர்ந்திருக்கிறோம். எங்கள் தமிழ்நாடு முதல்வர், பனை மரங்களை பாதுகாக்கும் வண்ணம் ஒரு கோடி பனை விதைகளை நட வேண்டும் என அறிவிப்பு செய்து அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இத்துடன், பனை சார்ந்த துணை தயாரிப்புகளை தயாரிக்கும் நவீன தொழிற்சாலையை சாயல்குடி சுற்றுவட்டார பகுதியில் அமைக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் மரபுவழி புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மிளகாய் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த மிளகாயினை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் ராமசாமிபட்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியம், திருவரங்கம் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மிளகாய் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் விவசாயம் செய்கின்றனர். தாங்கள் பயிரிட்ட காய்கறிகள் மற்றும் மிளகாய் பொருட்களை சேமித்து வைப்பதற்கு 100 மெட்ரிக் டன் அளவிலான சேமிப்பு கிடங்கு அரசு அமைத்து தர வேண்டும்.
விவசாய தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடு அமெரிக்கா. அங்கே 100 ஏக்கரில் மூன்று பேர் விவசாயம் செய்து விடுவார்கள். அத்தனை தொழில்நுட்பங்களும் அங்கு இருக்கின்றது. ஏராளமான மானியங்களை அந்த அரசு கொடுக்கின்றது, அந்த நாடு கொடுக்கின்றது. அதனைப் பயன்படுத்தி குறைந்த விலையில் அவர்கள் தயாரிக்க கூடிய விலை பொருள்களை இங்கு எந்தவித வரியும் இல்லாமல் சந்தைப்படுத்த அனுமதி அளித்திருப்பது தவறு. எனவே, அமெரிக்க நாட்டில் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கக்கூடிய விலை பொருள் எந்தவித வரியும் இல்லாமல் இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
நம்முடைய நாட்டில், விவசாயத் தொழில்நுட்பம் வளராமல் உள்ளது. இந்தநிலையில், அமெரிக்க விளைபொருட்களை சந்தைப்படுத்துவது நம்முடைய விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை இந்த அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உதை மின்சார திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய இலவச மின்சாரம் தடை செய்யப்படாது என்ற உத்தரவாதத்தை இந்த அரசு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் பயன்படுத்தப்பட்டு மண்வளம் மலட்டுத்தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண் முறையில் உரங்கள் தயாரிப்பதற்கு அதிகமான மானியங்களை இந்த அரசு வழங்க வேண்டும்.
உரங்கள் அதிகமாக தயாரிப்பதற்கும், விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலமாக விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உரத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கின்றது. உரத்தட்டுப்பாட்டினால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நீங்கள் ஆட்சி செய்யக்கூடிய அந்த மாநிலத்தில் தற்கொலை புகார்கள் எல்லாம் வந்திருக்கின்றன. 2023-24 ஆண்டிலே உரம் மானியம் 2.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ஒன்றரை லட்சம் கோடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனவே உரம் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காலநிலை மாற்றத்தால் வேளாண் துறை அதிகமாக பாதிக்கப்படுகிறது. காலமாற்றத்தால் ஏற்படுகின்ற பேரிடர் இழப்புகளை ஒன்றிய அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை தொடர்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கக் கூடிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஒரு சேர கிடைக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை தொடர்கிறது. எனவே, அரசு கொள்முதல் கொள்கையை தமிழ்நாட்டிற்கு தனியாக உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்தாண்டு ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க கேட்டிருந்தோம். அதனையும் அதிகப்படுத்திட வேண்டும். சந்தைப்படுத்துவதற்கு அதிகமான கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
காப்பீடு திட்டம்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பேரிடர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளை பாதுகாப்பதற்காக தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் என்று பெயரில் பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசு 2018 முதல் மேம்படுத்தப்பட்ட பிரதமர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் அந்த துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது. வருவாயை மட்டும் முன்னிறுத்தி செயல்படக்கூடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட நேரங்களில் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் இழப்பீடு கிடைக்கப்படுவதில்லை. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் தனியார் அனுமதியை ரத்து செய்து, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் மட்டுமே அதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நதிகள் இணைப்பு: தேசம் தழுவிய அளவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும், முதலில் மாநிலங்களுக்குள் ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக மேகதாது அணையில் கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும். நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீரை ஒன்றிய அரசு பெற்றுத் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.