சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
Updated on: 
1 min read

தஞ்சாவூர்: தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையின் பங்குதாரர் சரவணன், நிர்வாகத் தலைவர் ஆர்.எம்.பாஸ்கரன், மேலாளர் பாஸ்கர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடந்த ஜூலை மாதம் அவர்களை கைது செய்தனர். பின்னர், 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க காவல் துறை அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி வாங்கியதாகவும், அதன்பிறகும் காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து தங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருவதாகவும் டிஜிபியிடம், சரவணன் மனு அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில், அக்.9-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். அப்போது, நெஞ்சு வலிப்பதாக சுகுமாறன் கூறியதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சுகுமாறனிடம், தஞ்சாவூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் விசாரணை நடத்தி, அக்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சுகுமாறனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
டெல்லி பேரணி: எஸ்ஐஆர் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in