

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த திட்டம் பொதுமக்களிடம் குறிப்பாக, பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்தது.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க கிராம் மோதிரம் வழங்கும் திட்டமான, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க இரண்டு தங்க நகை விற்பனையாளர்களையும் அரசு தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான வழிக்காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் கர்ப்பிணிகள் தகுதி உடையவர்கள். கர்ப்பிணிகள் PICME மற்றும் RCH-ID பதிவு செய்திருக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, தொழிலாளர் நலவாரியத்தால் அளிக்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் முகவரி அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று போதுமானது.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும். முதல் குழந்தை, 2-வது குழந்தை, 3-வது குழந்தை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.