

சென்னை: தமிழகத்தில் பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 8 கிராம் தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் தலா 60,000 கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சமூகநலத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட அறிவிப்பு: பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய 22 காரட் (916) 8 கிராம் நாணயங்கள் வழங்கப்பட வேண்டும். 22 மி.மீ. விட்டம் கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தமிழில் அரசு இலச்சினைப் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு வைப்புத் தொகையாக ரூ.6 கோடி செலுத்த வேண்டும்.
கடந்த 3 நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.750 கோடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். தங்கத்தின் விலை, கொள்முதல் ஆணை நாளின் காலை விலையின்படி கணக்கிடப்பட்டு, செய்கூலி உட்பட கட்டணங்கள், ஜிஎஸ்டி சேர்க்கப்படும். அவற்றை 30 நாட்களுக்குள் விநியோகிக்க வேண்டும். விண்ணப்பங்களை டிசம்பர் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தவிர சில்க் மார்க், கைத்தறி முத்திரை பெற்ற 100% தூய மல்பெரி பட்டுப் புடவைகள் தரப்பட வேண்டும். புடவை 5.50 மீட்டர், ரவிக்கைத் துணி 0.70 மீட்டர் என மொத்தம் 6.20 மீட்டர் நீளமும், 430 கிராம் எடையும் (பட்டு 380, ஜரிகை 50) கொண்டிருக்க வேண்டும்.
மேலும், வைப்புத்தொகையாக ரூ.24 லட்சம் செலுத்த வேண்டும். கடந்த 3 நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.30 கோடிக்குக் குறையாமல் இருப்பதுடன், புடவைகளை 120 நாட்களுக்குள் விநியோகிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை டிசம்பர் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான ஆவணக் கட்டணம் ரூ.5,725 ஆகும். கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in, www.tnsocialwelfare.tn.gov.in ஆகிய வலைதளங்களில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.