

சென்னை: புதிய பணியாளர் தேர்வு வாரியம் அமைப்பதற்கு முன் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என கோயில் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது கோயில்களில் பணி புரிந்து வரும் தற்காலிக தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன்முறை செய்வதற்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் 1,500 பேர் மட்டும் அல்லாமல், அவர்களின் குடும்பத்தினர் சுமார் 10 ஆயிரம் பேரும் விரக்தியில் உள்ளனர்.
சட்டப்பேரவை அறிவிப்பில் கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நேரடி நியமனக் காலிப் பணியிடங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் தகுதியானவர்களை தேர்வு செய்ய புதிய பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை வரவேற்கிறோம். புதிதாக கோயில் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கு முன்பாக தற்போது தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 1,500 பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.