

கோப்புப் படம்
திருச்சி: தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகள், 2003 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜனவரி வரை புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வந்தன. முதுமலை தெப்பக்காடு, தேக்கம்பட்டி ஆகிய இடங்களில் 2021-ம் ஆண்டு வரை இந்த முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பின்னர் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.
அதன்பின் இதுவரை புத்துணர்வு முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் முகாம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: பக்தர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, கோயில்கள் மற்றும் திருமடங்களில் பராமரிக்கப்படும் 28 யானைகளுக்கு வரும் நவம்பர் மாதம் கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் புத்துணர்வு முகாம் நடக்கிறது.முதல்வர் விஜய்யும் முகாம் நடத்த ஆர்வம் காட்டுகிறார்.
இதன்தொடர்ச்சியாக முகாம் நடைபெறும் இடத்தை அமைச்சர் எஸ்.ரமேஷ் அண்மையில் ஆய்வு செய்துள்ளார். முகாமில் யானைகளுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகள், சத்தான உணவு வகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.