

சென்னை: சென்னை நோக்கி வந்த பினாகினி விரைவு ரயிலின் பான்டோகிராஃப் சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அந்த ரயில் அத்திப்பட்டு புதுநகர் - எண்ணூர் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனால், கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் விரைவு, மின்சார ரயில்கள் 3 மணி நேரம் தாமதமானதால்,பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பினாகினி விரைவு ரயில் நேற்று காலை புறப்பட்டு, கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் நேற்று பகல் வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்துக்கும், எண்ணூர் ரயில் நிலையத்துக்கும் இடையே நண்பகல் 12.05 மணிஅளவில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலின் மேற்கூரையில் உள்ள மின்சார சேகரிப்பு சாதனமான பான்டோகிராஃப்-ல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
அதாவது, உயர் அழுத்த மின்சார கம்பியில் இருந்து இன்ஜினுக்கு மின்சாரத்தை கடத்தும் பான்டோகிராஃப் சாதனத்தில் பழுது ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால்,அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்களும், புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று, ஆட்டோ, பேருந்து என இதர வாகனங்கள் மூலமாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
இதற்கிடையில், ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து, பினாகினி விரைவு ரயிலின் பான்டோகிராஃப் சாதனத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் 3 மணி நேரம் போராடி, பான்டோகிராஃப் சாதனத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக்கோளாறை பிற்பகல் 3.10 மணிக்கு சரிசெய்தனர்.
இதையடுத்து, ரயில்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின. விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால், சுமார் 3 மணி நேரம் ரயில்கள் தாமதமாகின. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.