கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தஞ்சாவூர்: லாபகரமாக இயங்கி வரும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகையைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து OP 193- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 145 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவோரிடம் இருந்து மாதந்தோறும் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படுவதால், வாராக்கடன் ஏதுமின்றி லாபகரமாக கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் லாபத் தொகையில் இருந்து உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது இந்தத் தொகை வழங்கப்படுவதால் பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில், 2023- 2024, 2024- 2025 ஆகிய 2 ஆண்டுகளுக்கான லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் முதல் மாநில பதிவாளர் வரை முறையிட்டும் இதுவரை பலனில்லை என கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேதுபாவாசத்திரம் வட்டாரக் கிளை செயலாளர் ப.ராஜ்மோகன் கூறியது: கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக லாப பங்கீட்டுத் தொகை வழங்காதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. தணிக்கை முடியவில்லை என காரணம் கூறி தட்டிக்கழித்து வருகின்றனர்.

ஒவ்வொறு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் லாப பங்கீட்டுத் தொகை கிடைக்கும். இந்தத் தொகை பேரூதவியாக இருக்கும் என்பதால் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் கடத்தி வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து சங்கத்தின் செயலாட்சியர் ரமேஷிடம் கேட்டபோது அவர் கூறியது: கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மூலம் சங்கத்தில் தணிக்கை செய்யுமாறு கூட்டுறவு சங்க தலைமையிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். தணிக்கை செய்வதற்கான ஆணை வந்ததும், தணிக்கை செய்யப்பட்டு, அதன்பிறகு லாப பங்கீட்டுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘அருவருப்பான கருத்து’ - நயினார் நாகேந்திரனுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in