

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி,டாஸ்மாக் ஊழியர்கள் வியாழக்கிழமை சென்னை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை கைவிடக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சென்னை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுப்பேட்டையில் இருந்து லாங்ஸ் கார்டன் சாலை வழியாக பாந்தியன் சாலை வரை பேரணியாக சென்றனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க சிறப்பு தலைவர் பாரதி, சிஐடியூ திருச்செல்வன் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து மனஉளைச்சல், சோர்வு ஏற்படுகிறது. பணி நேரம் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிந்தாலும், இரவு 1 மணி வரை பணியாற்ற வேண்டி வருகிறது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.
2003-ல் பணியில் சேர்ந்தோம். இப்போது, 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் ரூ.12 ஆயிரம் சம்பளத்துடன் பணிபுரிகிறோம். தற்போதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்களின் பணியை நிரந்தம் செய்ய வேண்டும். காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.