

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ்
திண்டுக்கல்: டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு ஊழியர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் மத்திய மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரிடம் திண்டுக்கல்லின் தற்போதைய நிலைமையை தெரிவித்தேன். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து தேவையான திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். திண்டுக்கல்லில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் விரைவில் முடிவு செய்யப்படும்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தற்போது ஓரளவுக்குக் குறைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் எம்.ஆர்.பி. விலைக்கு மேல் மதுபானங்களை விற்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
சில எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் ஊழியர்களை தூண்டிவிட்டுத் தவறான வழியில் கொண்டு செல்ல முயல்கின்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஊழியர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்கும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திண்டுக்கல்லில் கடந்த காலங்களில் இருந்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்பட்டனர். ஆனால், இனி அந்த நிலை நீடிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.