

முன்னுரிமைத் துறை கடன்களுக்காக ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: ஒரு மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு வலுவான கடன் பொருளாதாரம் மிகவும் அவசியமாகும்.
தமிழகத்தின் கடன் பொருளாதாரமானது, மாநில அரசின் வரவு-செலவு திட்ட அளவை போல் ஏறத்தாழ மூன்று மடங்கு பெரியது என்பதிலிருந்து, அதன் அளவு மற்றும் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். வரும் நிதியாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அண்மையில் அதன் அறிக்கையை அளித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசு கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. 16-வது நிதிக்குழுவின் இந்த அறிக்கை, தமிழகத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், மத்திய வரிகளின் பகிர்ந்தளிக்கத்தக்க நிதியில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரிக்க வேண்டுமென தெளிவாக கோரியிருந்த போதிலும், மாநிலங்களுக்கான பங்கானது 41 சதவீதமாக தொடர்வதாக நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது குறித்து மாநில அரசுகள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நிதிக்குழுவின் அறிக்கையில் எந்தவிதமான பரிந்துரையும் இடம் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. மாநிலங்களுக்கிடையிலான கிடைமட்ட பகிர்வில், தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கு வழங்கப்படாமல் நிதிக்குழு பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது.
ஒன்பதாவது நிதிக்குழு காலத்தில், தமிழகத்துக்கான பங்கு 7.931 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து வந்த நிதி குழுக்கள் அதனைக் குறைத்து வந்தன. இந்த பங்கு 4.079 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, தமிழக அரசின் நிலுவை கடனில் சுமார் 33 சதவீதத்துக்கு சமமானதாகும். 16-வது நிதிக்குழு பரிந்துரைகளில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு முறையே 23.74 மற்றும் 13.27 சதவீத அளவில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு வெறும் 0.44 சதவீதம் என்ற மிகச் சிறிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.