

சென்னை: கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, பக்தர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மனத் தாக்குதல் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறைவனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, அதை வைப்பதற்கே ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே இறைவனை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது குடும்பத்தோடு வரும் பக்தர்கள், தங்களது செல்போனை வைப்பதற்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது.
தவெக அரசு கோயில்களிலும் பக்தர்களிடமும் விதித்து வரும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், இந்து மதத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் நடவடிக்கைகளாகவும் அவர்கள் மீது தொடுக்கப்படும் மறைமுக மன தாக்குதலாகவுமே பார்க்கப்படுகிறது.
கோயில் என்பது பக்தர்களுக்கு நிம்மதியும் ஆன்மிக மகிழ்ச்சியும் தரும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்பாடுகளும் சிரமங்களும் நிறைந்த இடமாக மாறிவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.