

தி.வேல்முருகன்
சென்னை: “விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க பிப்.12-ல் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தை முழுமனதோடு ஆதரிக்கிறோம்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: “மத்தியில் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் என அனைத்தையும் அந்நிய நாடுகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் திட்டமிட்டுத் தாரைவார்க்கும் தேச விரோத செயலில் ஈடுபடுகிறது.
'மேக் இன் இந்தியா' எனப் பொய் முழக்கமிட்டுக் கொண்டே, கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் நிலக்கரி, மின்சாரம், ரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளை தனியார் மயமாக்கி சீரழித்தது. இப்போது இந்திய விவசாயத்தின் மரணச் சாசனமாக அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் கடும் குளிரிலும் மழையிலும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளோடு போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அமெரிக்க அதிபரின் வர்த்தக நலன்களுக்காக இந்திய உழவர்களைப் பலிகொடுக்கத் துணிந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஒட்டுமொத்த 140 கோடி மக்களும், இந்தியப் பெருநிலமும், அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி வருவதையும், நம் நாட்டின் வளங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்படுவதையும் நாங்கள் ஒருபோதும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்.
மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை மீட்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் பிப்.12-ல் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தை முழுமனதோடு ஆதரிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.