

சென்னை: “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குகள் மட்டுமே முக்கியமா? தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை முக்கியமில்லையா? மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழு டெல்லிக்குச் சென்று, பிரதமர் மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும்” என தவாகா தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேகேதாட்டு திட்டத்திற்கான அனுமதியும் நிதி நடவடிக்கைகளும் விரைந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய நீர்வள ஆணையம் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கர்நாடகா தனது அத்துமீறிய திட்டத்திற்காகத் தலைநகர் டெல்லியில் நேரடியாகக் களமிறங்குகிறது. தமிழ்நாடு தனது நியாயமான காவிரி உரிமைக்காக என்ன செய்யப் போகிறது?கர்நாடக முதல்வருக்கு டெல்லிக்குச் சென்று அழுத்தம் தர நேரம் இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்குத் தனது மாநிலத்தின் நீருரிமைக்காகத் டெல்லிக்குச் செல்ல நேரம் இல்லையா?
கர்நாடகா ஒன்றிய அரசிடம் தனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும்போது, தமிழ்நாடு தனது எதிர்ப்பை அதே வலிமையோடு பதிவு செய்யப் போவது எப்போது? மேகேதாட்டு தொடர்பாகக் கர்நாடகா புதிய திட்ட அறிக்கையை முன்வைத்து ஒப்புதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு இனியும் வெறும் வாய்மொழி எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது.
ஒன்றிய அரசு ஒரு முடிவை எடுத்த பிறகு எதிர்ப்பதா? அல்லது முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதா? மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காகவும் வாக்குக் கேட்பதற்காகவும் தொகுதிகளுக்கு விரைந்து செல்லும் தமிழக ஆட்சியாளர்கள், வாக்குக் கேட்கத் தொகுதிகளுக்குச் செல்ல முடிகிறது. தமிழ்நாட்டின் தண்ணீருக்காக டெல்லிக்குச் செல்ல முடியாதா?
இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளுக்காக முக்கியத்துவம் தரவில்லையே ஏன்? தமிழ்நாட்டின் விவசாயம் குறித்து, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து, அடுத்த தலைமுறை குறித்து, இவர்களுக்கு அக்கறை இல்லையா? இவர்கள்தான் எதிர்காலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்களா?
இப்படியானவர்களைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?தேர்தல் களத்தில் காட்டப்படும் அரசியல் வேகம், காவிரி உரிமைக் களத்தில் ஏன் காணப்படவில்லை? மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வாக்குகளைத் தேடும் அவசரம், தமிழ்நாட்டின் நீருரிமையைக் காப்பதில் இல்லையே ஏன்?
இது தேர்தல் முழக்கத்திற்கான தற்காலிகப் பிரச்சினை அல்ல. காவிரி நீரை நம்பியிருக்கும் விவசாயம், குடிநீர்ப் பாதுகாப்பு, தமிழ்நாட்டின் எதிர்கால நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இறையாண்மைப் பிரச்சினை.
அதேவேளையில், இதில் இன்னும் எத்தனை காலம்தான் போராடிக்கொண்டிருப்பது? வருடம் 365 நாளும் காவிரிக்காகவே போராடிக் கொண்டிருந்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் எதிர்காலத்தையும் குறித்து நாம் அக்கறை கொண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்கு நகர்வது எப்போது?
இந்தத் தொடர் போராட்டச் சுழலுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், நமது எதிர்காலப் பாய்ச்சல் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேகேதாட்டு திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதித்து, தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் அடங்கிய குழு டெல்லிக்குச் சென்று, பிரதமர் மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று திட்டவட்டமாக வலியுறுத்த வேண்டும்.
மேலும், ஒன்றிய அரசின் நடவடிக்கை, தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக அமையும் பட்சத்தில், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட உரிய சட்ட அமைப்புகளில் உடனடியாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தின் ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னரே, பதிலளிக்கும் நிலையில் தமிழ்நாடு இருக்கக் கூடாது. முன்கூட்டியே அரசியல் அழுத்தத்தை உருவாக்கி, சட்டரீதியான தடுப்பை ஏற்படுத்தி, காவிரி உரிமையைப் பாதுகாப்பதற்கான உறுதியான செயல்திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவிரி தமிழ்நாட்டின் வாழ்வாதாரம். அதைக் காப்பதில் இனியும் தாமதம் கூடாது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.