

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 18) காலை சரியாக 10 மணிக்குக் கூடியது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முதல் முறையாக உரையாற்றி வரும் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதில் ஏதும் சர்ச்சை உருவாகுமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் சலசலப்புகள் இன்றி சுமுகமாகத் தொடங்கியது.
முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன், முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றார்.
இதையடுத்து, 17-வது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின், பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் துணைத் தலைவராக ரவிசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மே.13-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்து வருகிறார்.
முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கரை சுட்டிக்காட்டி...
தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்து வருகிறார். அவர் தனது உரையில் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுப் பேசினார். மேலும், பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததை சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளியேறினார்.
அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.