மக்கள் குரல் முதல் உரிமைப் போராட்டம் வரை: தமிழகம் 2025 - ஒரு விரைவுப் பார்வை

மக்கள் குரல் முதல் உரிமைப் போராட்டம் வரை: தமிழகம் 2025 - ஒரு விரைவுப் பார்வை
Updated on
2 min read

மக்கள் குரல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசிக்கு 2023இல் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. மக்கள் எதிர்ப்பை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டமும் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.

நஞ்சான மருந்து: மத்தியப் பிரதேசத்தில் தரமற்ற இருமல் மருந்துகளால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் மூன்று நிறுவனங்களில், ஒரு தமிழக நிறுவனமும் அடக்கம். இது தயாரித்த ‘கோல்டுரிஃப்’ மருந்தில் நச்சுத்தன்மை வாய்ந்த டை எத்திலின் கிளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டது. உரிமையாளர் ஜி.ரங்கநாதன் கைதுசெய்யப்பட்டார்.

விபத்து விபரீதம்: தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதின, சிவகங்கை திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மோதின, அண்மையில் திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து எழுத்தூர் அருகே டயர் வெடித்து கார்களில் மோதியது உள்ளிட்ட விபத்துகள், சாலைப் போக்குவரத்தில் ஏராளமான பிரச்சினைகள் களையப்பட வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டின.

இன்னொரு விபத்து: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே வாயலூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் அனல் மின் நிலையத்துக்கான பணியில் சாரம் சரிந்து ஒன்பது புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கவனக் குறைவின் விளைவு: சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியின்போது, முகலிவாக்கம் அருகே பாலத்தில் புதிதாகப் பொருத்தப்பட்ட இரண்டு கான்க்ரீட் உத்தரங்கள் நழுவி விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனமே விபத்துக்குக் காரணம் என விசாரணைக் குழு கூறியது. கவனக்குறைவு விமர்சனத்துக்குள்ளானது.

சிறுநீரகப் பறிப்பு: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சில விசைத்தறித் தொழிலாளர் களுக்கு மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாகச் சிறுநீரகம் பெறப்பட்டதாக எழுந்த புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றமே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அக்குழுவுக்குத் தடை விதிக்கும்படி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

உரிமைப் போராட்டம்: சென்னை மாநகராட்சியில் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்துத் தூய்மைப் பணியாளர்கள் போராடினர். உயர் நீதிமன்ற உத்தரவும், நள்ளிரவுக் கைதும் போராட்டத்தை நிறுத்தின. காலை உணவு உள்படச் சில நலத்திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்தாலும் சிறிய அளவில் போராட்டம் தொடர்கிறது.

கொள்முதலில் தாமதம்: தமிழக அரசு கொள்முதலில் செய்த தாமதத்தால், காவிரிப் படுகைப் பகுதிகளில் மழைநீரில் ஆங்காங்கே நெல் வீணானதாக முறையீடுகள் ஓங்கி ஒலித்தன. இம்முறை நெல்லின் ஈரப்பத அளவை 17%லிருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இரும்பு யுகம்: தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 2019லிருந்து நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளில் இரும்பு வாள், ஈட்டி, கொக்கி போன்றவை கிடைத்துள்ளன. இவற்றின் காலம் பொஆமு 4000இன் தொடக்கம் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இரும்பு யுகம் தமிழ் மண்ணில் தொடங்கியது எனப் பெருமிதம் தெரிவித்தது தமிழக அரசு!

வளர்ச்சி... மகிழ்ச்சி: 2024-2025இல் 9.69% பொருளாதார வளர்ச்சியை அடைந்த தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றது. நிதி, கல்வி, மருத்துவம் போன்றவற்றை உள்ளடக்கிய மூன்றாம் நிலைத் துறை, பல்வேறு நுகர்பொருளுக்கான மூலப்பொருள் உற்பத்தியை உள்ளடக்கிய இரண்டாம் நிலைத் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்குக் காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்!

மக்கள் குரல் முதல் உரிமைப் போராட்டம் வரை: தமிழகம் 2025 - ஒரு விரைவுப் பார்வை
‘சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in