“தமிழக வளர்ச்சியால் மத்தியில் உள்ளோருக்கு வயிற்றெரிச்சல்” - கமல்ஹாசன் பிரச்சாரம்

“தமிழக வளர்ச்சியால் மத்தியில் உள்ளோருக்கு வயிற்றெரிச்சல்” - கமல்ஹாசன் பிரச்சாரம்
Updated on
1 min read

திருச்சி: “தமிழகத்தின் வளர்ச்சி மத்தியில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதை செய்தால்தான் நிதி தருவேன் என்பது மிரட்டல் பாணி” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி கூறினார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து அரியமங்கலம் பகுதியில் அவர் பேசியது: “இந்தியா பல விஷயங்களில் சரிந்து கொண்டிருக்கும்போது, தமிழகம் மின்னும் நட்சத்திரமாக உள்ளது. இதனால், தமிழகத்தை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

அனைவரையும் அரவணைக்கும் முதல்வரின் பெருந்தன்மை காரணமாக 15 கட்சிகள் இந்தக் கூட்டணியில் ஒரு தலைமையின் கீழ் இணைந்திருக்கின்றன.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியில் திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும், 2, 3 ஆண்டுகளில் திருச்சியில் இருந்து இளைஞர்கள் உலக அரங்கில் விளையாட்டுகளில் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வருவார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சி மத்தியில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதை செய்தால்தான் நிதி தருவேன் என்பது மிரட்டல் பாணி.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நமக்கென்று தனி கல்விக் கொள்கையை உருவாக்கியவர். இவர் மீண்டும் அமைச்சராக தொடர வேண்டும். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை நான் இவரிடம் கேட்பேன். இதற்கு முன்பு எங்களுக்கு வழங்கிய வாக்குகளை இப்போது இவருக்கு வழங்குங்கள்” என்று கமல்ஹாசன் பேசினார்.

“தமிழக வளர்ச்சியால் மத்தியில் உள்ளோருக்கு வயிற்றெரிச்சல்” - கமல்ஹாசன் பிரச்சாரம்
“பாமகவை உடைக்க திமுக எடுத்த முயற்சியை அன்புமணி தவிடு பொடியாக்கினார்” - பழனிசாமி பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in