பொங்கலுக்கு கூடுதல் தரத்தில் இலவச வேட்டி, சேலை - தமிழக அரசு ரூ.300 கோடி ஒதுக்கீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் தரத்தில் இலவச வேட்டி - சேலை வழங்கப்படவுள்ளதாக கைத்தறித் துறை தெரிவித்துள்ளது. இதற்கான கொள்முதலுக்கு முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி - சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து கைத்தறித் துறை செயலர் தி.ந.வெங்கடேஷ் வெளியிட்ட அரசாணை விவரம்: பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க அரசு உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்தாண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நிகழாண்டில் பயனாளிகளைக் கணக்கீடு செய்வதற்காக மாவட்ட வாரியாக ஆய்வு செய்தபோது 2 கோடியே 27 லட்சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்சத்து 14,094 வேட்டிகளும் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், கடந்த 3 ஆண்டுகளைப் போலவே சுமார் 177.64 லட்சம் சேலைகள், 177.22 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக தேவைப்படும் வேட்டி, சேலைகள் பின்னர் உற்பத்தி செய்யப்படும்.

நடப்பாண்டில் கூடுதல் தரத்துடன் புதிய ரக நூலில் வேட்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. சேலைகளில் சில்வர் அல்லது காப்பர் நிற ஜரிகை பார்டரும், வேட்டிகளில் வண்ண பாலியஸ்டர் பார்டரும் இடம் பெறவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் மற்றும் உற்பத்தி மதிப்பீடு ரூ.642.88 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக ரூ.606.94 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அடுத்து விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தின் பலன்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குடும்ப அட்டை இல்லாத முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகள் ஆதார் அடிப்படையிலான கைவிரல் ரேகை மூலம் அடையாளம் உறுதிசெய்யப்பட்ட பிறகு வேட்டி, சேலை பெறலாம்.

2026 பொங்கல் திட்டத்தில் எஞ்சியுள்ள பழைய வேட்டி, சேலைகளை நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையின்போது முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடுக்கிய பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in