

கிரிஷ் சோடங்கர்
சென்னை: கரூர் எம்.பி ஜோதிமணியின் புகாரைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. சர்வே என்ற பெயரில் ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்டகாலம் பணி யாற்றியவர்கள், வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர்.
கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை குலைத்து வருகிறது. நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக களத்தில் நின்று போராடி வெற்றிபெற வேண்டுமானால் கட்சிக்குள் தொண்டர்கள் மாவட்ட, வட்டார தலைவர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
ஜோதிமணியின் குற்றச்சாட்டு கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கரை, கோவா மாநில காங்கிரஸ் தலைவராக மாற்றம் செய்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய, உண்மை கண்டறியும் குழு தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வடசென்னை கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடந்துகொண்டிருந்தது.
அப்போது, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மதரமாகனியை பதவியில் இருந்து மாற்றக்கோரி, முன்னாள் மாவட்ட தலைவர் திரவியத்தின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் திரண்டு கோஷங் களை எழுப்பினர். அவர்களிடம், மதரமாகனி யின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, இருதரப்பினருக் கும் இடையே கைகலப்பாக மாறியது. இதனால் சத்தியமூர்த்தி பவன் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.