திமுகவுடன் கூட்டணியை விரும்பும் தலைவர்கள்: மீண்டும் பிளவை நோக்கி காங்கிரஸ்!

திமுகவுடன் கூட்டணியை விரும்பும் தலைவர்கள்: மீண்டும் பிளவை நோக்கி காங்கிரஸ்!
Updated on
2 min read

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணியை தொடர விரும்பும் நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் டெல்லி தலைமை செயல்பட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் பிளவை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் பலர், 2026 தேர்தலில் அதிக இடம், ஆட்சியில் பங்கு என திமுகவை நோக்கி அம்புகளை வீசி வந்தனர். அதிக இடம், ஆட்சியில் பங்கு திமுகவில் சாத்தியமில்லை என கருதும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தவெகவுடன் ஏன் கூட்டணி வைக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்தனர்.அதனால் காங்கிரஸ், தவெக பக்கம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் டெல்லி தலைமை, தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார், கட்சியின் தேசிய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகிய 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை, கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக அமைத்தது.

இக்குழுவும் சில தினங்களுக்கு முன்பு, அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் விஜய்யை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்பதால், ராகுல் காந்தியின் கண்ணசைவு இன்றி விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸில் ஒரு தரப்பினரும், காங்கிரஸ்காரராக இல்லாமல், தனிப்பட்ட முறையிலான சந்திப்பு அது என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் திமுகவுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் ஊழல் குறித்து பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் அடிபட்டது.

அதனால் 2024 மக்களவை தேர்தலில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட திமுக முட்டுக்கட்டை போட்டதாக கூறப்பட்டது. அதை மனதில் வைத்து திமுக கூட்டணியை முறிக்கும் செயல்களில் பிரவீன் சக்கரவர்த்தி ஈடுபடுவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர், சிட்டிங் எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்களில் பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணியை தொடரவே விரும்புகின்றனர்.

ஒருவேளை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் விருப்பத்துக்கு மாறாக, விஜய்யுடன் கூட்டணி என்ற முடிவை ராகுல்காந்தி எடுப்பாரேயானால், 1996 சட்டப்பேரவை தேர்தலை போன்று, காங்கிரஸ் பிளவுக்கே வழிவகுக்கும்.

காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு சத்தியமூர்த்தி பவன்கூட கிடைக்காமல், சிறிய அலுவலகத்தில் கட்சி நடத்தி வேண்டியிருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டால், கட்சியை உடைக்கும் வேலையில் திமுக கூட இறங்கக்கூடும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

திமுகவுடன் கூட்டணியை விரும்பும் தலைவர்கள்: மீண்டும் பிளவை நோக்கி காங்கிரஸ்!
“நீங்கள் அங்காளி, பங்காளி என்றால் நாங்கள் மாமன், மச்சான்” - முதல்வருக்கு நயினார் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in