

சென்னை: சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மொழி, மத அரசியல் செய்வதை விட்டு மக்கள் நல அரசியலை அவர் செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பங்கேற்று பேசிய போது, பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாச நாடகத்தை போடுகிறார். பிரதமர் மோடி அவரால் தமிழ் படிக்க முடியாமல் போய்விட்டது என்று ரொம்ப பீல் செய்து பேசி உள்ளார்.
ஒரு பக்கம் தமிழ் மீது அக்கறை இருப்பது போல் நாடகம் நடத்தும் மோடி இன்னொரு பக்கம் நம் பிள்ளைகள் தமிழ் படிக்க கூடாது என்று இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறார்? இது எந்த வகையில் நியாயம்?" என்று வெற்றி அரசியலை பேசி இருக்கிறார்.
பிரதமரை பார்த்து கேள்வி கேட்பது போல், விளம்பர அரசியல் செய்து, வேண்டுமென்றே பிரதமர் மோடியின் புகழை சீர்குலைக்கவும், தேர்தலுக்காக மொழி அரசியல் செய்யவும், மக்கள் விரோத திமுக அரசால் ஒரு உருக்குலைந்து போயிருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அவதூறு அரசியல் செய்வதை உதயநிதி ஸ்டாலின் கைவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று மோசமான முறையில் விமர்சித்து, இந்திய அரசியல் சாசன சட்டத்தை அவமதித்து தேர்தலுக்காக மொழி அரசியல் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பது துரதிஷ்டவசமானது.
தமிழகத்தில் சுயநல அரசியலுக்காக விளம்பர மோகத்தில் தன்னைத் தானே இயக்கி நடித்து, பொய், பித்தலாட்ட கதைகள் கூறி, பிரிவினைவாத அரசியல் பேசி மக்களை குழப்பி, ஏமாற்றி, திமுகவின் ஊது குரலாக செயல்பட்டு வரும் செபாஸ்டின் சைமன் என்கிற சீமான் போல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
'தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ என்ற அழகுத் தமிழின் பெருமையைப் நம்முடைய தமிழ் மொழியை தெய்வமாக நாம் வணங்கி போற்றுவது போல, இறைவனை துதிப்பது போல, தமிழைப் போன்று தொன்மையான தெய்வ மொழி என்று பாரதம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய மொழியாக கருதப்பட்டு, ஏராளமான பல்கலைக்கழகங்களால் கற்பிக்கப்பட்டு வரும் சமஸ்கிருதத்தை குறைத்து மதிப்பிட்டதற்காக உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகம், பாரதம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளான புனித வேதங்களை உருவாக்கிய தெய்வ மொழி சமஸ்கிருதம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
நான் கிறிஸ்துவன் என்று அறிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், உலகிற்கே வழிகாட்டும், இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், பாரதத்தின் பெரும்பான்மையான கோயில்களில் சனாதன தர்மத்தின் ஆகம விதிகளின்படி இந்து மத தெய்வங்களை துதிக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களை கொண்ட சமஸ்கிருத மொழியை "செத்த மொழி" என்று மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்து, மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் உள்நோக்கத்துடன் இந்திய அரசியல் சாசன சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கொடூர தாக்குதல் மன்னிக்க முடியாது.
இந்துக்கள் போற்றி வணங்கும் சமஸ்கிருத மொழியை செத்த மொழி என்று கொச்சைப்படுத்தி, சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக, சனாதன தர்மத்திற்கு எதிராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும், தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி ஒரு மொழியை கீழ்த்தரமாக தாழ்த்தி பேசுவது நியாயமா? இதுதான் தமிழை வளர்க்கும் விதமா?
தமிழ் மொழியை மேம்படுத்த ஏன் தமிழ் பல்கலைக்கழகங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழக திமுக அரசு உருவாக்க முன் வரவில்லை? என்ற தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
இந்தியா மட்டுமல்ல உலக மொழிகள் பேசும் அனைவரிடத்திலும் தமிழகத்தை சிறுமைப்படுத்தக்கூடிய வகையில் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நடந்து கொள்வது வெட்கக்கேடானது. கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித நூல் அரபி மொழியில் எழுதப்பட்டது. இன்று இந்தியாவில் வாழ்கின்ற பெரும்பாலான கிறிஸ்தவ,இஸ்லாமிய மக்கள்
இந்திய மொழிகளிலேயே தங்களுடைய புனித நூலை படித்து வணங்கி மகிழ்ந்து செயல்படுகின்றனர். சமஸ்கிருத மொழியை கொச்சைப்படுத்தி பேசியதை போல், உதயநிதி ஸ்டாலின் ஹீப்ரு மொழியையும் அரபு மொழியையும், இந்தியாவில் செத்த மொழியாகிவிட்டது என்று சொல்ல முடியுமா?
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு இனி இந்துமதம் , சனாதர தர்மம் மட்டுமல்ல சமஸ்கிருத மொழி மட்டுமல்லாமல் எந்த மதத்தையும் எந்த தர்மத்தையும் எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சித்து பேசக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.