Stalin

முதல்வர் ஸ்டாலின்

வரலாற்றில் ஏவிஎம் இல்லாமல் தமிழ் சினிமா பற்றி குறிப்பிட முடியாது: முதல்வர் ஸ்டாலின்

Published on

சென்னை: வரலாற்றில் தமிழ் திரையுலகத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அதில் நிச்சயமாக ஏ.வி.எம். நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற, மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: வரலாற்றில் தமிழ் திரைவுலகத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், அதில் நிச்சயமாக ஏ.வி.எம். நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. ‘மெய்யப்ப செட்டியார்’ என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவரை எல்லோரும் அப்பச்சி, அப்பச்சி என்றுதான் செல்லமாக மரியாதையோடு, தைரியமாக அழைப்பதுண்டு.

அவருடைய மறைவிற்குப் பிறகு சரவணன் அவர்கள் இந்நிறுவனத்தை எப்படியெல்லாம் கட்டிக் காத்திருக்கிறார் என்பதைப் பற்றி அவரோடு நெருங்கிப் பழகியிருக்கக்கூடிய அண்ணன் எஸ்.பி. முத்துராமனாக இருந்தாலும் சரி, நம்முடைய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, கலைஞானியாக இருந்தாலும் சரி, நம்முடைய கவிஞர் வைரமுத்துவாக இருந்தாலும், அவர்கள் பேசுகின்றபோது பல்வேறு செய்திகளையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

சரவணன் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்டு, முதல் பரிசு பெற்றிருக்கிறார். எதற்காக பரிசு பெற்றிருக்கிறார் என்றால், முதன்முதலில் கலந்துகொண்ட பேச்சுப் போட்டியில் பராசக்தி வசனத்தைப் பேசித்தான் வெற்றி பெற்று, பரிசையும் பெற்றிருக்கிறார்.

1972-ல் சரவணன் ‘ஹலோ மெட்ராஸ்’ மாத இதழைத் தொடங்கியபோது, அதன் முதல் இதழை தலைவர் கருணாநிதி தான் வெளியிட்டார். 1975-ஆம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த வேலைநிறுத்தம் நடைபெற்றபோது தலைவர் கருணாநிதிதான் அதில் முழுமையாக ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்தித் தந்திருந்தார்.

நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது கடற்கரையில் நடைபயிற்சிக்குச் செல்வதுண்டு. அப்போது நம்முடைய சரவணன், அவருடைய நண்பர்களோடு நடைபயிற்சிக்கு வருவார். நான் அடிக்கடி அவரை சந்தித்துப் பேசுவதுண்டு. சென்னையெல்லாம் எப்படி இருக்கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்.

நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் 10 பாலங்களை கட்டினேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தப் பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நான் நேரடியாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்ததில்லை, தபால் மூலம் அனுப்பி வைத்துவிடுவோம். ஆனால், அதை பார்த்துவிட்டு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து முன் வரிசையில் அமர்ந்திருப்பார்.

நான் ஆச்சரியப்படுவது உண்டு. நான் பல நேரங்களில் அவரை மேடைக்கு அழைப்பதுண்டு. ”இல்லை, இல்லை நான் அங்கேயே இருக்கிறேன். சென்னை மாநகர மக்களுக்கு இது முக்கியம். அதனால்தான் நான் இதை முக்கியம் என்று கருதி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று என்னிடத்தில் அடிக்கடி தெரிவிப்பார்.

அதுமட்டுமல்ல. நான் மேயராகப் பொறுப்பேற்றிருந்தபோது மாநகராட்சியில் படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களையெல்லாம் விமானத்தில் திருப்பதி வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏர் இந்தியா மூலம் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்குக் காரணமே நம்முடைய ஏ.வி.எம். சரவணன் தான். அவரும் என்னுடன் வந்தார்.

விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்கள் இப்போதும் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது. முதலிலெல்லாம் கூத்து நிகழ்ச்சிகள் இருந்தன, அதன் பிறகு, நாடகம் வந்ததற்குப் பின் கூத்து மறந்து போய்விட்டது. சினிமா வந்த பிறகு நாடகம் காணாமல் போய்விட்டது. அதுபோல், ஒவ்வொன்றும் அந்தந்த நேரத்தில் வருகின்றபோது அதற்கு தகுந்தாற்போல் நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சாதாரணமாக சொன்னார். நான் அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் எனக்கு அறிவுரைகள், ஆலோசனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவர் நம்மையெல்லாம் பாசத்தோடு கட்டிப்போட்டு வைத்ததால்தான் அவ்வாறு கை கட்டி நின்று நமக்குப் பாடமாகியிருக்கிறார்" இவ்வாறு அவர் பேசினார்.

Stalin
வெனிசுலா | இடைக்கால அதிபராக பொறுப்பேற்க துணை அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in