

சீமான்
சென்னை: ‘கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்த புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக?
அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த ஜூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்.
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே. ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்?
பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மவுனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், கள்ளக்குறிச்ச்சி மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? நீதிபதி விக்டோரியா கவுரி ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?
பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.