

சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், தான் எழுதிய ‘மனம் மற்றும் நனவு பற்றிய உரையாடல்கள்’ என்ற நூலை, ராமகிருஷ்ண மடத்தின் துறவி சுவாமி சர்வப்ரியானந்தா வெளியிட, முதல் பிரதியை டிவிஎஸ் கேப்பிட்டல் தலைவர் கோபால் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். | படம்: ம.பிரபு |
சென்னை: செயற்கை நுண்ணறிவுக்கு மனிதர்களைப் போல தனிப்பட்ட விழிப்புணர்வு கிடையாது என்று சுவாமி சர்வப்ரியானந்தா தெரிவித்தார். சென்னை சர்வதேச மையம் சார்பில் ‘பண்டைய ஞானம் நவீன காலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா?’ என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது.
ராமகிருஷ்ண மடத்தின் துறவியும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான சுவாமி சர்வப்ரியானந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தான் எழுதிய ‘மனம் மற்றும் நனவு பற்றிய உரையாடல்கள்’ என்ற நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை டிவிஎஸ் கேப்பிட்டல் தலைவர் கோபால் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சுவாமி சர்வப்ரியானந்தா பேசியதாவது: நான் யார் என்பது மனிதர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி. இதற்கான பதில்கள் உபநிடதங்கள் காலத்தில் இருந்தே இந்தியத் தத்துவத்தில் உள்ளன.
புத்த மதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களுக்கு இடையே நடைபெற்ற விவாதங்கள் இந்தியத் தத்துவத்தை வளர்த்துள்ளன. தற்போது குவான்டம் இயற்பியல், நரம்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல் துறைகள் மனித விழிப்புணர்வு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றன.
மனித மூளை எவ்வாறு விழிப்புணர்வை உருவாக்குகிறது என்பது இன்னும் முழுமையாக விளக்கப்படாத ஒன்று. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பல திறன்களைப் பெற்றிருந்தாலும், அதற்கு மனிதர்களைப் போன்ற தனிப்பட்ட விழிப்புணர்வு இருப்பதாகக் கூற முடியாது. அறிவாற்றலும், விழிப்புணர்வும் வெவ்வேறானவை.
மனிதர்கள் பலராகவும், அவர்களது உடல், மனம், எண்ணங்கள் வெவ்வேறாகவும் இருந்தாலும், அனைவருக்குள்ளும் இருக்கும் அடிப்படை விழிப்புணர்வு ஒன்றுதான் என்பதே அத்வைதத்தின் முக்கிய கருத்து. அனைத்து உயிர்களும் ஒரே அடிப்படை உண்மையின் வெளிப்பாடுகள்.
இதை உணரும்போது வெறுப்பு, பொறாமை, பகைமை குறைந்து அன்பும், ஒற்றுமையும் உருவாகும். அனைத்து உயிர்களும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை உணர்ந்தால், பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் ஏற்படாது. இவ்வாறு அவர் பேசினார்.