‘எண் ஒன்றை அழுத்தவும்’ மீண்டும் டார்ச்சர்! - சர்வே போன் கால்களால் ‘தெறிக்கும்’ புதுச்சேரி மக்கள்

‘எண் ஒன்றை அழுத்தவும்’ மீண்டும் டார்ச்சர்! - சர்வே போன் கால்களால் ‘தெறிக்கும்’ புதுச்சேரி மக்கள்
Updated on
1 min read

தேர்தலுக்காக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘சர்வே’ என்ற பெயரில் போன் கால் மூலம் புதுச்சேரி மக்களை படுத்தி எடுக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, புதுச்சேரி மக்களுக்கு தொடர்ச்சியாக வந்த போன் கால்களில் பேசிய பதிவு செய்யப்பட்ட பெண் குரல், “ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவரா... அவரை நீங்கள் அறிந்துள்ளீர்களா..? ஆம், எனில் எண் ஒன்றை அழுத்தவும்” என டார்ச்சர் செய்தது. இதைத் தாங்க முடியாத பலரும், எஸ்ஐஆர் படிவங்களில் இருந்து கைபேசி எண்களை திருடி எடுத்து இப்படி டார்ச்சர் செய்வதாக சைபர் க்ரைமில் புகார் அளித்தனர். ஜோஸ் சார்லஸ் தரப்போ, “எங்களுக்கும் இந்த சர்வேக்கும் துளியும் சம்பந்தமில்லை. யாரோ எங்கள் பெயரைப் கெடுக்க இப்படிச் செய்கிறார்கள்” என ஜகா வாங்கியது.

இந்த நிலையில், தற்போது முதல்வர் ரங்கசாமி பெயரிலும் சர்வே போன் கால்களை ஓடவிட்டு மக்களை மிரட்ட ஆரம்பித்திருக் கிறார்கள். இப்படி வரும் அழைப்புகளில், “புதுச்சேரியின் தேவைகள், வளர்ச்சிக்கான முன்னுரிமைகளை அறிய கருத்துக்கணிப்பு நடத்துகிறோம். உங்கள் கருத்துகள் மதிப்புடையவை - உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்” என பதிவுசெய்யப்பட்ட குரல் பகட்டாகப் பேசுகிறது.

இதைத் தொடர்ந்து, “முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகளில் திருப்தியடைந்து உள்ளீர்கள் என்றால், எண் ஒன்றை அழுத்தவும், நடுநிலை என்றால் இரண்டையும், அதிருப்தி என்றால் மூன்றையும் அழுத்தவும்” என வழக்கமான பாணியில் பேச்சை வளர்க்கிறது அந்த போன் கால். இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று எரிச்சலடைந்து போன் காலை துண்டித்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் தொல்லை செய்கிறார்கள்.

உங்கள் கட்சி இப்படி சர்வே எடுக்கிறதா என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபாலிடம் கேட்டதற்கு, "எந்த சர்வேயும் நாங்கள் எடுக்கவில்லை. மக்கள் முதல்வரின் செல்வாக்கை அறிய சிலர் இப்படி குறுக்கு வழியில் இறங்கி இருக்கிறார்கள். புதுசா கட்சி ஆரம்பிச்சவங்களா, ஏற்கெனவே இருக்கவங்களான்னு நாங்களும் சர்வே பற்றி விசாரிச்சுட்டு இருக்கோம். ஆனா, யார் எந்த சர்வே எடுத்தாலும் மக்கள் எங்கள் பக்கம்தான்” என்றார்.

ஜோஸ் சார்லஸின் எல்ஜேகே கட்சியும் “நாங்கள் சர்வே எடுக்கவில்லை” என்கிறது. திமுக தரப்போ, “சைபர் க்ரைம் என்னதான்செய்கிறது? ஏற்கெனவே கொடுத்த புகாருக்கே நடவடிக்கை இல்லை. தற்போது மீண்டும் வேறு பெயரில் இந்த போன்கால் வருகிறது” என்று ஆவேசப்படுகிறது. தேர்தலுக்காக கிளம்பி இருக்கும் இன்ஸ்டன்ட் அரசியல்வாதிகளிடம் சிக்கிக் கொண்டு புதுச்சேரி மக்கள் தான் பாவம்பேரவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘எண் ஒன்றை அழுத்தவும்’ மீண்டும் டார்ச்சர்! - சர்வே போன் கால்களால் ‘தெறிக்கும்’ புதுச்சேரி மக்கள்
தவெகவில் இருந்து விலகி ஜோஸ் சார்லஸ் கட்சியில் இணைந்த நடிகர் தாடி பாலாஜி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in