

செங்கல்பட்டு: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் களமிறங்கியதால், மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பொத்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மாணவர் விடுதிகளில் அதிகளவில் தங்கி வருகின்றனர். இந்த இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மாணவர்கள் தங்கியுள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சமீபத்தில் எஸ்.ஆர்.எம். கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சக மாணவரை ஏர்கன் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டும் மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் போலீஸார் இதுபோன்ற அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். தற்போது மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றைய ஒருங்கிணைந்த சோதனையால் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியுள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் பரபரப்பு நிலவியது.’ எனத் தெரிவித்துள்ளார்.