

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை செயலர் பெ.அமுதா வெளியிட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது: அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ், சர்க்கரை இருப்பு கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூலை 28-ல் வெளியிட்ட அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வணிகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சர்க்கரையை இருப்பு வைக்கும் காலக்கெடு 30 நாட்களில் இருந்து 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் எந்தவொரு இடத்திலும் ஒரு வணிகர் ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைத்திருக்கக்கூடாது.
கொல்கத்தா, அசாம் மாநிலங்களில் மட்டுமே அதிகபட்சம் 2 ஆயிரம் குவிண்டால் வரை சர்க்கரை இருப்பு வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் கடந்த அக்.15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.