பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது

பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது
Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி மடம் நில மோசடி வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீனை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததால், அவரை போலீஸார் கைது செய்து திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்துக்கு மாலையில் அழைத்து வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் இவரது ஜாமீனை நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதையடுத்து போலீஸார் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில், அவர் கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரை தேடி தனிப்படை போலீஸார் கொடைக்கானல் சென்றனர். அங்கு தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஐஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து இன்று மாலை திண்டுக்கல் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திவரும் போலீஸார், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது
‘இந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு?’ - வேளாண் பட்ஜெட் மீது வானதி சீனிவாசன் விளாசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in