

குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்
திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று (திங்கள் கிழமை) காலை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானர்.
பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி., சாஜிதா நேரடியாக விசாரணையை துவக்கினார்.
பழநி கோயில் செயல் அலுவலர் கணபதி, முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் உள்ளிட்டோரிடம் எஸ்.பி., விசாரணை நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட நிலம் தொடர்பான 1880-ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு தொடர்பான ஆதார ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர் நீதிமன்ற கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது.
எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஒரு வாரம், தினமும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.