

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய உள்ளது. இதனால், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் ஜன.9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
மேலும், இது அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரக்கூடும். இது தவிர, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன், வியாழன் (ஜன.7,8) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை: ஜன.9, 10 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.9-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.10-ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.11-ம் தேதி செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் புதன்கிழமை (ஜன.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 9-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.