5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆனால் விசாரணைக்கு வராததால், மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம்
‘தமிழகத்தில் 10 நாட்களில் 6 முதியவர்கள் படுகொலை’ - முதல்வர் பதவி விலக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in