கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: உதயநிதி தவறாகப் பேசுவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு முறையீடு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: உதயநிதி தவறாகப் பேசுவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு முறையீடு
Updated on: 
1 min read

சென்னை: ‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொதுவெளியில் பேசுகிறார்’ என அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், அது தொடர்பான சமூக வலைதளப் பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், எஃப்ஐஆர் தொடர்பான செய்திகளையோ, பதிவுகளையோ பொதுவெளியில் யாரும் வெளியிடக்கூடாது எனவும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக இன்று ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், ‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு புகார் அளிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். அவரது பேட்டி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது’ என குற்றம்சாட்டினார்.

அதற்கு நீதிபதி, ‘அரசியல் ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு நான் என்ன செய்ய முடியும்? கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நேற்று விரிவாக உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதிகாரம் உங்களிடம் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டு இருந்தால் சைபர் க்ரைம் போலீஸார் மூலமாக நீங்களே அதுபோன்ற பதிவுகளை நீக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்’ என அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: உதயநிதி தவறாகப் பேசுவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு முறையீடு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: காகர்லா உஷா ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது அரசு

X