

எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் ஒரு வாக்கு கூட தவறிவிடாத வகையில் கண்காணித்து செயலாற்ற வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்ஐஆருக்கு திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனாலும் எஸ்ஐஆர் பணியில் திமுக-வினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக பாகம் வாரியாக திமுக-வைச் சேர்ந்த பிஎல்ஏ-க்கள் எஸ்ஐஆர் படிவங்களை விநியோகித்து, அதனை மீண்டும் பெற்று பிஎல்ஓ- வசம் ஒப்படைக்கும் பணியில் தீவிரம் காட்டினர்.
தற்போது, தமிழகத்தில் 99.27 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வாக்காளர்களால் படிவங்கள் பெறப்படாத மற்றும் பிஎல்ஓ-விடம் திரும்ப ஒப்படைக்காத படிவங்களை கண்காணித்து, ஒரு ஓட்டு கூட தவறவிடாமல் 100 சதவீதம் இணையத்தில் பதிவேற்ற தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக வழக்கறிஞர் அணிக்கு உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக அண்மையில், திமுக சட்டத்துறை செயலாளரும் எம்பி-யுமான என்.ஆர்.இளங்கோ அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தை கூட்டி, எஸ்ஐஆர் பணியை 100 சதவீதம் பூர்த்தி செய்திட தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சிலர், “பாஜக அரசு, எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் லட்சக் கணக்கில் ஓட்டுகளை நீக்கி, திராவிடக் கட்சிகள் கள்ள ஓட்டு மூலமே வெற்றிபெற்று வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறது.
இதை முறியடிக்கும் விதமாக திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், எஸ்ஐஆர் பணிகளை செம்மையாக முடிப்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
எஸ்ஐஆர் பணிகள் முடிவுற்றாலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் புதிதாக வாக்காளர்கள் சேர்க்கை பணி நடக்கும். அப்போது, விடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சந்தித்து, தொகுதி மாறியிருந்தால் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும் படி வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.
ஆக, எக்காரணம் கொண்டும் ஒரு வாக்கைக் கூட தவறவிடக் கூடாது என்பதே தலைவர் ஸ்டாலினின் கண்டிப்பான உத்தரவு. இந்தப் பணிகளை தொகுதி பொறுப்பாளர்களின் கீழ் வழக்கறிஞர் அணியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு செம்மையாக செய்து முடிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றனர்.