தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா.
ரூ.1,261 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.840.76 கோடியில் கட்டப்பட்ட 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.420.34 கோடியில் 1,984 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மறு கட்டுமானத்திட்டத்தின் கீழ், தேனாம்பேட்டையில் நடந்த விழாவில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன், அப்பாசாமி முதலி தெரு, பெரியபாளையத்தம்மன் கோயில் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.153.69 கோடியில் கட்டப்பட்ட 870 குடியிருப்புகளைத் திறந்துவைத்தார்.
கிரீம்ஸ் சாலையில் உள்ள குடிசைகளை அகற்றி, அப்பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க ரூ.46.12 கோடியில், 283 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மயிலாப்பூரில் நடந்த விழாவில், குயில் தோட்டம், வன்னியபுரம் திட்டப் பகுதிகளில் ரூ.101.94 கோடியில் கட்டப்பட்ட 600 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.
கோட்டூர்புரத்தில் நடந்த விழாவில் கோட்டூர்புரம், அப்பாவு நகர், சுப்புபிள்ளை தோட்டம், ராயபுரம் தொகுதியில் செட்டித் தோட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் முல்லை நகர் திட்டப்பகுதி, வால்பாறை தொகுதியில் வால்பாறை, மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் கரடிக்கல், திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெயில்பேட்டை பகுதி-2 ஆகிய திட்டப் பகுதிகளில் ரூ.585.13 கோடியில், 3,897 குடியிருப்புகளைத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வுகளில், பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து, சிட்கோ நகர் திட்டப்பகுதியில் ரூ.374.22 கோடியில் 1,701 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.5 கோடியில் முதல்வர் படைப்பகம் கட்ட அடிக்கல் நாட்டினார். குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்து, அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த திட்டப் பகுதிகளில், கூடைப்பந்து மைதானம், திறந்தவெளி அரங்கம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், கைப்பந்து மைதானம், 200 மீட்டர் தடகளப்பாதை, கபடி மைதானம், கோ கோ மைதானம், பொதுமக்கள் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் 250 இருக்கைகள் கொண்ட காட்சிக்கூடம், சிறுவர் பூங்கா, அங்கன்வாடி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், இணை மேலாண் இயக்குநர் ந.பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
