

கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.59 கோடியே 93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.59.93 கோடியில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உதவி பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் உட்பட 213 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர்கல்வித் துறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கடலூர், வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.59.93 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழகத்தில் உள்ள 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை உலகத் தரமான தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக ரூ.2,590.30 கோடி செலவில் மேம்படுத்த டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி ஆணையரகம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 190 உதவிப் பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள் மற்றும் 11 உதவி இயக்குநர் (உடற்கல்வி) பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர் கோவி.செழியன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், உயர்கல்விச் செயலர் பொ.சங்கர், கல்லூரி கல்வி ஆணை எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ. இன்னெசன்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெ.குமரேசன், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன செயல் துணைத் தலைவர் சைலேஷ் சரப், உலகளாவிய தலைவர் சுஷில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.