

கோவை: “முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கின்றனர்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும், “உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, மத்திய அமைச்சரும், பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (ஏப்.9) கோவை வந்தார்.
தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை வளர்ச்சிகளை மேம்படுத்த மத்திய அரசு வழங்கிய ஏராளமான நிதியை திமுக தலைமையிலான மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆக்கப்படுவார். உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். திமுக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. டாஸ்மாக் முறைகேடு, அரசு வேலைக்கு பணம் என்பன போன்ற குற்றச்சாட்டுகளால், தமிழ்நாட்டின் பெருமையை திமுக ஆட்சியில் மாநிலம் இழந்து வருகிறது.
திமுக கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நிதிகளை வழங்கியபோதும் அதனை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு திமுக அரசு பயன்படுத்தாமல் அதிலும் முறைகேடுகள் செய்து வருகின்றனர்.
தமிழக மக்கள் மீதும், தமிழக கலாச்சாரம் மீதும் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை இல்லை. தேர்தல் பிரச்சாரங்களில் உதயநிதி பேசும் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் உதயநிதியை மாநிலத்தின் முதல்வராக ஆக்க விடக் கூடாது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உதயநிதி முதல்வராக்கப்படுவார்.
தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சிக்கு உறுதி அளித்துள்ளனர். செந்தில் பாலாஜி உட்பட திமுகவின் ஊழல் அமைச்சர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுத் இந்த தேர்தல் தமிழகத்துக்கும், புதுடெல்லிக்குமான தேர்தல் என திமுகவினர் கூறுகின்றனர். நாட்டை இவ்வாறு இரண்டாக பிரித்துப் பார்க்கும் பார்வை எங்களுக்கு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே என்டிஏ கூட்டணி செயல்பட்டு வருகிறது” என்றார்.