மாநிலங்களின் தொகுதி அளவை 30 ஆண்டுக்கு மாற்றக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களின் தொகுதி அளவை 30 ஆண்டுக்கு மாற்றக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ‘தொகுதி மறு​வரையறை, தொகுதி எண்​ணிக்கை உயர்​வு, தற்​போதுள்ள விகி​தாச்​சா​ரத்திலேயே மாநிலங்​களின் தொகுதி அளவு அடுத்த 30 ஆண்​டு​களுக்கு மாற்​றப்​ப​டாது என்​கிற உறு​தி​மொழி ஆகிய​வற்​றுக்​கான அரசி​யலமைப்​புச் சட்​டத்​திருத்​தங்​கள் நிறைவேற்​றப்பட வேண்​டும்’ என்று முதல்​வர் ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2011-ம் ஆண்டு மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில், நாடாளு​மன்​றத்​தி​லும் மாநில சட்​டப்​பேர​வை​களி​லும் மகளிருக்கு இடஒதுக்​கீடு வழங்​கு​வது பரிசீலனை​யில் உள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

2026 மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​குப் பிறகு தொகுதி மறு​வரையறையை மேற்​கொண்ட பின்​னரே மகளிருக்கு இடஒதுக்​கீடு வழங்​கப்​படும் எனும் மத்​திய பாஜக அரசின் முந்​தைய முடி​விலிருந்து (128-வது அரசி​யலமைப்​புச் திருத்​தச் சட்​டம், 2023) வில​கு​வ​தாக இது அமைந்​துள்​ளது.

குறிப்​பாக, 4 பெரிய மாநிலங்களில் விரை​வில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்​யப்​படு​வ​தாகத் தோன்​றுகிறது. தேர்​தல் நடத்தை விதி​முறை​கள்அமலில் உள்ள நிலை​யில், இத்​தகைய மிக முக்​கிய​மான நகர்வு மேற்​கொள்​ளப்​படு​வது முன்​னெப்​போதும் நாம் கண்​டி​ராதது.

எனினும், திமுக​வின் தலை​வ​ராக​வும், பெண்​ணுரிமைக்​காக நூறாண்​டு​களுக்​கும் மேலாக முன்​னின்று போராடிவரும் திரா​விட இயக்​கத்​தின் கொள்கை வாரி​சாக​வும் இந்த முடிவை எந்த நிபந்​தனை​களு​மின்றி நான் முழு​மை​யாக ஆதரிக்​கிறேன்.

அதே​நேரம், நியாய​மான தொகுதி மறு​வரையறை எனும் எங்​கள் உரிமையை விட்​டுத்தர மாட்டோம் என்​ப​தை​யும் வலியுறுத்துகிறேன். மாநிலங்​களின் தற்​போதைய தொகுதி அளவு எந்த நிலை​யிலும் மாற்​றப்​படக் கூடாது என்​பது​தான் தொடர்ச்​சி​யாக நாங்​கள் கொண்​டிருக்​கும் நிலைப்​பாடு.

இதனை உறு​தி​செய்ய, அடுத்த 30 ஆண்​டு​களுக்​கும் தற்​போதுள்ள தொகுதி அளவு எவ்​வித மாற்​ற​முமின்​றித் தொடரும் எனும் உறு​தி​மொழி அரசி​யலமைப்​புச் சட்​டத் திருத்​தம் வாயி​லாக அளிக்​கப்பட வேண்​டும்.

தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலில் உள்​ள​தா​லும், அரசி​யல் கட்​சிகள் தேர்​தல் பணி​களில் ஈடு​பட்​டுள்​ள​தா​லும், ஜூன் மாதத்​தின் தொடக்​கத்​தில் நாடாளு​மன்​றச் சிறப்​புக் கூட்​டத் தொடரை இதற்​காகக் கூட்​டி, தொகுதி மறு​வரையறை, தொகுதி எண்​ணிக்கை உயர்​வு, தற்​போதுள்ள விகி​தாச்​சா​ரத்​திலேயே மாநிலங்​களின் தொகுதி அளவு தொடர்​வது, அது அடுத்த 30 ஆண்​டு​களுக்கு மாற்​றப்​ப​டாது என்​கிற உறு​தி​மொழி ஆகிய​வற்​றுக்​கான அரசி​யலமைப்​புச் சட்​டத்​திருத்​தங்​கள் நிறைவேற்​றப்பட வேண்​டும். இவ்​வாறு அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் தொகுதி அளவை 30 ஆண்டுக்கு மாற்றக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in