

இலங்கை நாடாளுமன்றத்தில் ‘அழகிய தமிழ் மகன்’ படப் பாடலை பாடி விஜய்யை வாழ்த்திய நிஹாம் காரியப்பர்.
ராமேசுவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் விஜய் பட பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் எம்.பி. சாணக்கியன் ராசமாணிக்கம் பேசியதாவது: விஜய்க்கு வாழ்த்துகள். தமிழ்நாடு மக்களோடும், தமிழ்நாட்டு அரசோடும் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காக பணிசெய்ய காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான நிஸாம் காரியப்பர் கூறுகையில், “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக் கொண்டிரு...” என்ற விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் திரைப்படத்தில் வரும் பாடலை பாடி, வாழ்த்தினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் ம.ஆ.சுமந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள், அரசின் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்.
தமிழ் தேசியப் பேரவைத் தலைவரும், எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாக தங்களது தமிழ்த்தேச அங்கீகாரத்துக்காக போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், எமது உரிமைப் போராட்டத்துக்கு வலுவைத் தரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.