

பெரியகுளம்: விமானத்தில் உடல்நலம் பாதித்த இலங்கைப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெரியகுளம் மருத்துவர் மூர்த்திக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரைப் பாராட்டிச்சான்றிதழ் வழங்கியது.
தேனி மாவட்டம் பெரிய குளம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மூர்த்தி (78). இவர் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 19-ம் தேதி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். கொலம்பியா விமான நிலையத்தில் இருந்து சிட்னி நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் இவருடன் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 74 வயது பெண் திடீரென மயங்கினார்.
உடனே மருத்துவர் மூர்த்தி அப்பெண்ணை பரிசோதனை செய்ததில் அவருக்குக் குறைந்த ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை வழங்கினார். சுமார் ஒரு மணி நேரக் கண்காணிப்பில் அந்தப் பெண் இயல்பு நிலை திரும்பினார்.
மருத்துவரின் முதல் உதவி மற்றும் தொடர் சிகிச்சையால் சகபயணி காப்பாற்றப்பட்டதுக்கு விமானத்தில் பயணித்தோர் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் மருத்துவர் மூர்த்திக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.