

ராமேசுவரம்: கச்சத்தீவில் பிப்ரவரி 27, 28 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 4,000 இலங்கை பக்தர்களும், 4,000 இந்திய பக்தர்கள் என மொத்தம் 8,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய - இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொணடனர்.
இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 27 மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி, திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.
மறுநாள் பிப்ரவரி 28 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவடைய உள்ளது எனவும், 4,000 இலங்கை பக்தர்களும் 4000 இந்திய பக்தர்களும் என மொத்தம் 800 பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.