

சென்னை: தமிழகத்தில் விரைவில் அறிமுகமாக உள்ள `சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை' போலீஸாருக்கு வெளிநாட்டு போலீஸ் போல் பிரத்யேக சீருடை தயாராகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வராக அவர் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதை செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அந்த படையின் தலைமை அதிகாரியாக ஐஜி பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இதில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் காவல்கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வாளர் கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிரடிப் படைக்கு மற்ற காவல் துறையினரிடமிருந்து தனித்துவமாகத் தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தில் தைரியம், வேகம் மற்றும் அறிவுத்திறனை பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. களப்பணியில் துரிதமாகச் செயல்படும் வகையிலும், ரோந்துப் பணிகளை எளிதாக்கும் வகையிலும் இந்த சீருடைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தைக்கப்பட்டுள்ளன. கருப்பு நிறதொப்பி, பெல்ட், நேவி புளூ சட்டை,காக்கி பேன்ட் என அசத்தலாக இந்த சீருடை தயாராகியுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உட்பட அனைத்து வகையான குற்றங்களும் வெகுவாகக் குறையும் என போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் உள் துறைச் செயலர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.