

திருச்சி: குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவாவும் மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் கோரியுள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம்.
அதேவேளையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் மீண்டும் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தையும், மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதையும் அதை சட்டப்பேரவை ஏற்றுக் கொண்டதையும் நாங்கள் நிராகரிப்பு செய்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 5.14 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் நிலையில், நிகழாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. மோட்டார் பயன்படுத்தி மிகக் குறைந்த அளவே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும். மேலும், நிகழாண்டு சம்பா நெல் பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதா, வேண்டாமா என அரசு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகத்திடம் கேட்டுப் பெற வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு நீர் தர மறுத்தால், இடைக்கால இழப்பீட்டுத் தொகையை கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத் தருமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஜூலை 22-ல் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டத்தில் எடுக்கும் முடிவின் அடிப்படையிலும், பற்றாக்குறை காலத்தில் கர்நாடகம்- தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கணக்கீட்டு அடிப்படையிலும் உரிய நீரை,கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு மேலாண்மை ஆணையம் பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.