

சென்னை: தமிழக அரசால் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைத்தறிக் கண்காட்சியை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார் தமிழக கைத்தறித் துறை சார்பில் 12-வது தேசிய கைத்தறி நாள் விழா கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் விஜய், கைத்தறிக் கண்காட்சி-2026, கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ‘வெற்றித் தறி’ விற்பனையகத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், 2025–26-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தேர்வான 11 பேருக்கு ரூ.22.25 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
தற்போது முதல்வரால் தொடங்கப்பட்ட கைத்தறிக் கண்காட்சி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா பருத்திச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உட்பட பல்வேறு கைத்தறித் தயாரிப்புகளுடன், பிற மாநிலங்களின் தந்துஜா, மிருக்ணாயினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்பெற்ற கைத்தறித் தயாரிப்புகளும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர நெசவாளர்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் நோக்கில் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம்(நிப்ட்) உதவியுடன் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் ‘வெற்றித் தறி’ விற்பனையகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ப.வெங்கடரமணன், ம.விஜய் பாலாஜி, ஜெகதீஸ்வரி, சீ.ரமேஷ், பெ.மதன் ராஜா, ஸ்ரீநாத் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.