

பழனிசாமி
சென்னை: அதிமுகவில் நீக்கப்பட்ட 400 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மீண்டும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் பொதுச் செயலாளராகிய நீங்கள், கட்சியை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளாலும், நீங்கள் திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க எடுத்த தவறான முடிவை சுட்டிக்காட்டி, இரு வேறு கருத்துக்கள் காரணமாக 47 எம்எல்ஏக்களில் 25 எம்எல்ஏக்கள், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
2021, 2026 சட்டப்பேரவை தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய 3 தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும் தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால் தொடர் தோல்விகளை சந்தித்ததால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டாமா? என ஏங்கி வருகின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு கட்சி தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலும் சிறப்பாக கட்சிப் பணிகளில் செயல்பட்டு வந்த கோவை, திருப்பூர், கடலூர் கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிலை செயலாளர்களை எந்தவித காரணங்களும் இன்றி கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களை நியமித்து வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இது கட்சியை மேலும் பலவீனப்படுத்தும்.
கட்சி பொதுச் செயலாளர் ஆகிய நீங்கள் கட்சி செயற்குழு, பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்து தெரிவிக்க கூடாது. தங்களது செயல்பாடுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் கட்சி எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்வதை மட்டும் தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை கட்சி சட்ட திட்டத்திற்கு முரணாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளீர்கள்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 ஆண்டுகள் 8 மாதம் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது. இதில் கிளைக் கழக செயலாளர் மற்றும் அடிமட்ட தொண்டர் வரை உள்ளாட்சி பதவிக்கு வருவார்கள். இது ரொம்ப முக்கியமானது. இதற்கு கட்சியை பலப்படுத்தியே ஆக வேண்டும்.
அதிமுகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உண்மையான அக்கறையும் ஈடுபாடும் இருக்குமேயானால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மறப்போம் மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கட்சி நலன் கருதி, மே 13-ம் தேதிக்கு பிறகு கட்சியில் பல்வேறு நிலைகளில் இன்று வரை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டும், கட்சியில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்கி கட்சியை வலுப்படுத்த முன் வரவேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.