

சவுமியா அன்புமணி
திருவள்ளூர்; திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிகளவில் மதுபானங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறது என பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
'சிங்கப் பெண்ணே எழுந்து வா' என்ற முழக்கத்தோடு தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண நிகழ்வில் சௌமியா அன்புமணி பேசியதாவது: ஆந்திர எல்லையையொட்டியுள்ள மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் உள்ளது.
இளைஞர்களிடையே உள்ள போதை பழக்கத்தால் பொதட்டூர்பேட்டையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக இரு மகன்கள் தந்தையை பாம்பு கடிக்கச் செய்து கொன்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கும் திருத்தணி பகுதியில், நெசவு பூங்கா அமைக்கப்படும், நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதுபானங்களை அதிகளவில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது திமுக அரசு.
திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால், மக்கள் கேட்காமலேயே 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் அன்புமணி. ஆகவே, அன்புமணியை தேர்தலில் வெற்றி பெற செய்தால் நிறைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவார்.
பெண்கள் உள்ளாட்சி நிர்வாக பதவிகளுக்கு அதிக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.