

தமிழ்நாட்டில் தற்போது பெண்களும் அதிகளவில் குடிக்கும் நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை என்று பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினார்.
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி தனியார் மண்பத்தில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டத்தில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்தாண்டு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஒரு தீர்வு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் பட்டியலில் கடலூர் மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் தான் என்எல்சி, சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்து மிக்க நிறுவனங்களிடம் இருந்து கடலூர் மாவட்டத்தை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் நிலம், நீர், காற்று மாசடைந்து கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.
வடலூரில் வள்ளலார் கோயிலுக்கு அருகில் பெருவெளியில் விழா நடத்துவதற்காக 110 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தது பொதுமக்கள். அரசாங்கம் கொடுக்கவில்லை. அந்த இடத்தை தற்போது திமுக அரசு அபகரிக்க நினைக்கிறது. பெருவெளி நிலத்தை அழிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகள் மூலமாக நீர்நிலைகளில் டையாக்சின் கலந்து இருக்கிறது. இதனால் கேன்சர் பாதிப்புகள் அதிகமாக வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு பூஜ்ஜியமாக உள்ளது. பெண்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்சினைகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமே குடிதான். போதையில் வரும் ஆண்கள் தங்களுடைய நிலையை மறந்து பெண்களிடம் அத்து மீறுகிறார்கள். வருடம் தோறும் அத்தனை பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நடக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களை குடிக்க வைத்தது போய், தற்போது பெண்களையும் அதிகளவில் குடிகாரர்கள் ஆக்கியது தான் இந்த அரசின் சாதனை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனை தடுப்பதற்கு நாம் அனைவரும் துணிந்து நிற்க வேண்டும். பெண்கள் ஏமாந்தது போதும். இனிமேல் நமக்கான உரிமையை எங்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார்.