

சென்னை: தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை 3 நாட்களில் தொடங்கக்கூடும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை அடுத்த 3 நாட்களில் அரபிக்கடல், வங்கக்கடல், லட்சத்தீவுகள், கேரளா, தமிழகத்தின் சில பகுதிகளுக்கு முன்னேறும் வகையில் நிலைமை சாதகமாக உள்ளது. அதனால், தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை அடுத்த 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய தெற்கு கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று (ஜூன் 1) முதல் 6-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறி்ப்பாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
வெப்பநிலை 86 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 4-ம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.